கொச்சி: திருமணம் முடிந்து தேனிலவு செல்லும் வேளையில் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் தமக்குத் தேர்தல் பணி வழங்க வேண்டாம் என கேரள ஆசிரியை ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
காக்கநாடு பகுதியைச் சேர்ந்த அந்த ஆசிரியைக்கு வரும் 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பின்னர் ஏப்ரல் 7 முதல் 11ஆம் தேதி வரை புதுமணத் தம்பதியர் வெளி மாநிலத்துக்குத் தேனிலவு செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
தேனிலவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேனிலவுக்குச் செல்லும் வேளையில் தமக்குத் தேர்தல் பணி வழங்கப்பட்டால் என்ன செய்வது எனத் தவிப்பில் உள்ளார் அந்த ஆசிரியை.
இதையடுத்து, மாவட்டத் தேர்தல் அதிகாரியான ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்காக, அவர் புதன்கிழமை (மார்ச் 18) கொச்சியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் சென்றபோது அவர் அங்கு இல்லை. எனினும், விரைவில் ஆட்சியரைச் சந்திக்க இருப்பதாகவும் தனது கோரிக்கை ஏற்கப்படும் என நம்புவதாகவும் ஆசிரியை தெரிவித்துள்ளார்.

