புதுடெல்லி: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அலிகர் நகரில் அமைந்துள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை (டிசம்பர் 24) இரவு அந்த ஆசிரியர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அவர் அந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஏபிகே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராவ் டேனிஷ் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புதன்கிழமை இரவு 9 மணியளவில் சக ஆசிரியர்கள் இருவருடன் பல்கலைக்கழகத்தின் கென்னடி அரங்கிற்கு அருகே நடந்து சென்றபோது முகமூடி அணிந்த ஆடவர் சிலர் அவரைச் சுட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த அவர், பின்னர் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராப் பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணை தொடர்கிறது.

