தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலைத் தொட்டு வணங்காத மாணவர்களை அடித்த ஆசிரியை பணியிடைநீக்கம்

1 mins read
6a8b2b56-b3f5-4375-b274-d71348c99585
இனி எந்த ஒரு பள்ளியிலும் இத்தகைய சம்பவம் நிகழாமல் இருப்பது உறுதிசெய்யப்படும் எனக் கல்வித்துறை உறுதியளித்துள்ளது. - மாதிரிப்படம்

புவனேஸ்வர்: காலையில் பள்ளி ஒன்றுகூடலுக்குப் பிறகு தன் காலைத் தொட்டு வணங்காத 31 மாணவர்களை அடித்ததற்காக ஆசிரியை ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) நிகழ்ந்தது.

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அப்பெண், பெத்னோட்டியிலுள்ள காந்ததேவுலா அரசு நடுநிலைப் பள்ளியில் துணை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.

அன்றைய நாள் காலை இறைவணக்கத்திற்குப் பிறகு, 6, 7, 8ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்குச் சென்றனர். அப்போது, அவர்களின் வகுப்பறைகளுக்குச் சென்ற அந்த ஆசிரியை, தன் காலைத் தொட்டு வணங்காத மாணவர்களை அடித்ததாக உள்ளூர்வாசிகள் கூறினர்.

தகவலறிந்ததும் பள்ளிக்கு விரைந்த மாணவர்களின் பெற்றோர்கள், அந்த ஆசிரியைமீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரை அடுத்து, மாணவர்களிடம் உள்ளூர்க் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த ஆசிரியை தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த ஆசிரியை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

“அனைத்துக் கல்வி நிலையங்களிலும் உடல்சார்ந்த தண்டனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இனி எந்த ஒரு பள்ளியிலும் இத்தகைய சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்வோம்,” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்