புனே: பள்ளி ஆசிரியர் ஒருவர் கரும்பலகையில் கணித வினாத்தாளுக்கான விடையை எழுதிப் போட்டு, மாணவர்கள் ஏமாற்றுவதற்கு உதவியுள்ளார்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பிலான காணொளி பரவியதை அடுத்து ஆசிரியை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக இந்தியா டுடே ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
கேமராவில் பதிவான இந்தச் சம்பவம் பிப்ரவரி 25ஆம் தேதி பெதுல் மாவட்டத்தில் நடந்தது.
பள்ளி நிர்வாகம் ஆசிரியையை பணியிடைநீக்கம் செய்து, அதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தேர்வின்போது, தொடக்கப்பள்ளி ஆசிரியையான சங்கீதா விஸ்வகர்மா கரும்பலகையில் கணித வினாத்தாளுக்கு விடைகளை எழுதுவதைக் காண முடிகிறது.
மாணவர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபட ஆசிரியர் உதவியதால், அடையாளம் கூற விரும்பாத ஒருவர், இந்த முழுச் சம்பவத்தையும் காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
இந்தக் காணொளி விரைவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
இந்த மோசமான சம்பவம் குறித்து அவசர விசாரணை நடத்தும்படி பெதுல் மாவட்ட ஆட்சியர் நரேந்திர குமார் சூர்யவன்ஷி உத்தரவிட்டார்.
விசாரணையின்போது, ஆசிரியைக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறியப்பட்டதால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையரான ஷில்பா ஜெயின், தேர்வுக்கூடக் கண்காணிப்பாளராக ஆசிரியை சங்கீதா விஸ்வகர்மா நியமிக்கப்பட்டதாகக் கூறினார்.
இருப்பினும், கரும்பலகையில் வினாத்தாளுக்கு விடை எழுதி மாணவர்கள் மோசடி செய்வதற்கு உதவியதன் மூலம் விஸ்வகர்மா தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக ஜெயின் சுட்டிக்காட்டினார்.
“அவரது இடைநீக்கத்தைத் தொடர்ந்து, ஆசிரியைமீது ஒழுங்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்,” என்று ஜெயின் கூறினார்.
“கூடுதலாக, தேர்வு மையத் தலைவர், உதவித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விசாரணையைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் காவல்துறையில் புகார் பதிவுசெய்யப்படும்,” என்றும் அவர் சொன்னார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கல்வித் துறை அனைத்து ஆசிரியர்களுக்கும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
தேர்வுகளின்போது நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்துவது அல்லது எந்த வகையிலும் மோசடியை ஊக்குவிப்பது போல் செயல்படுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கல்வித் துறை கூறியுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்பை அமல்படுத்துமாறு நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.