நொய்டா: உத்தரப் பிரதேசத்தில் மதியிறுக்கம் கொண்ட சிறுவனைச் சரமாரியாக அடித்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
அம்மாநிலத்தில் உள்ள நொய்டா வட்டாரத்தில் இருக்கும் அனைத்துலகப் பள்ளி ஒன்றில், வருண் கோயல் என்பவரின் 10 வயது மகன் படிக்கிறார்.
மதியிறுக்கம் எனப்படும், கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட அச்சிறுவனைப் போன்ற மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காகச் சிறப்பு ஆசிரியர்கள் இந்தத் தனியார் பள்ளியில் உள்ளனர்.
இந்நிலையில், மார்ச் 26ம் தேதி அச்சிறுவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்ததாகக் கூறப்பட்டது.
இது தொடர்பான காணொளி மார்ச் 28ஆம் தேதி வெளியானது.
பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கும் ‘வாட்ஸ்அப்’ குழுவில் அது பகிரப்பட்டது.
மார்ச் 29ஆம் தேதி சமூக ஊடகத்தில் அக்காணொளி பரவியதை அடுத்து, மாணவனைத் தாக்கிய ஆசிரியர், பள்ளி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மீது சிறுவனின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் அப்பள்ளி ஆசிரியரும் சிறப்பு ஆசிரியருமான அனில் குமார், சிறுவனை அடித்ததாகவும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள்மீது உடற்குறையுள்ளோருக்கான உரிமைச் சட்டம், சிறுவர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
ஆசிரியர் அனில் குமாரை கைது செய்ததோடு, முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அச்சம்பவம் பற்றி அறிந்ததும், உத்தரப் பிரதேச மாநில தொடக்கக் கல்வித் துறை சார்பாக, கவுதம புத்தா நகர் மாவட்ட கல்வி அதிகாரி ராகுல் பன்வார் விசாரணை நடத்தினார்.
அப்போது, முறையான அனுமதி இல்லாமல் தனியார் பள்ளி இயங்கியது தெரிந்ததால் பள்ளிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.