லக்னோ: உத்தரப் பிரதேசம் மீரட்டில் ஒரு ஆசிரியை, கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். தனது ஊதியத்தை மட்டும் தவறாமல் பெற்று வந்துள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்ட அவரும் அதற்கு உதவியாக இருந்த பள்ளி முதல்வரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் பரிட்ஷித்கர் எனும் பகுதியில் ஒரு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில், ஆசிரியையாகப் பணியமர்த்தப்பட்ட சுஜாதா யாதவ் என்பவர் பல ஆண்டுகளாகப் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதனால், அவரது வகுப்புகளுக்கு ஆசிரியர் இன்றி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து அம்மாநில அரசின் மாவட்ட அரசு பள்ளிகளின் தலைமை அதிகாரியான ஆஷா சவுத்ரிக்கு புகார் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட விசாரணையில், ஆசிரியை சுஜாதா யாதவ் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பள்ளிக்கு வராமல் இருந்ததும் அதற்காக எந்தவொரு விடுப்புக் கடிதமும் அவர் அளிக்காததும் தெரியவந்தது.
மாறாக, அவர் பள்ளிக்கு வராத நாட்களிலும் ஆசிரியை சுஜாதாவிற்கான வருகை மட்டும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கு அப்பள்ளியின் முதல்வர், உடந்தையாக இருப்பதும் தெரிந்துள்ளது. இதன் காரணமாக, அப்பள்ளியின் முதல்வருடன் சேர்த்து ஆசிரியையான சுஜாதா யாதவும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


