பெங்களூரு: ஐநூறு ரூபாய் நோட்டுடன் வந்து சேர்ந்த 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாளைத் திருத்திய ஆசிரியர்கள், அவற்றில் காணப்பட்ட கோரிக்கைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு மாணவர் தமக்கு அதிக மதிப்பெண்கள் அளிக்குமாறு கேட்டுள்ளார். மற்றொரு மாணவர் தம்மை குறைந்தபட்ச மதிப்பெண்களாவது அளித்து தேர்ச்சி பெற வைக்குமாறு கெஞ்சியுள்ளார்.
மற்றொரு மாணவர், ஒருபடி மேலே சென்று, தன் காதல் தொடர வேண்டுமானால், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். விடைத்தாள் திருத்தும் ஆசிரியரின் தேநீர் செலவுக்கு என்று குறிப்பிட்டும் சில மாணவர்கள் பணத்தை விடைத்தாளில் மறைத்து வைத்திருந்தனர்.
கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை நடத்தப்பட்டது. இம்முறை 4.27 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது நிறைய விடைத்தாள்களில் இவ்வாறு ரொக்கப்பணமும் பல்வேறு கோரிக்கைகளும் இருப்பதைக் கண்டு ஆசிரியர்கள் சிரிப்பும் வியப்புமாக அவற்றை ஒதுக்கிவிட்டு தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.

