துபாய்: நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் துபாயில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த விமானம் வியன்னாவில் இருந்து புதுடெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
‘ட்ரீம்லைனர்’ வகையைச் சேர்ந்த அந்த விமானம், ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் தானியக்க விமானி (ஆட்டோ பைலட்) தொழில்நுட்பம் இயங்கவில்லை என்பது தெரியவந்தது.
அந்தக் கோளாற்றை உடனடியாக சரிசெய்ய முடியாது என்பதால் தலைமை விமானி விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பினார்.
இதையடுத்து, அந்த விமானம் உடனடியாக துபாய் விமான நிலையத்தில் மிகுந்த பாதுகாப்புடன் தரையிறங்கியது.
பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்ட பின்னர், தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது.
அதன் பிறகு அதே விமானத்தில் பயணிகள் டெல்லிக்குப் புறப்பட்டனர் என்று ஏர் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தொழில்நுட்பக் கோளாறால் விமானம் தாமதமாவது குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டது. எதிர்பாராத சிரமங்களுக்கு வருந்துகிறோம்,” என்று அந்தச் செய்திக்குறிப்பு தெரிவித்தது.