தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சலவை இயந்திரத்தில் கருநாகம்; நூலிழையில் உயிர்தப்பிய ஆடவர்

2 mins read
6f42f6db-f801-4913-80a7-30e681300378
சலவை இயந்திரத்தினுள் சீறியபடி காட்சிதரும் கருநாகக் குட்டி. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

கண்ணூர்: சலவை இயந்திரத்தில் துணி சிக்கியிருப்பதாக நினைத்து, கருநாகத்தை இழுக்க முயன்ற தொழில்நுட்பர் நூலிழையில் அதனிடமிருந்து தப்பினார்.

இந்தியாவின் கேரள மாநிலம், கண்ணூரில் வசித்து வருபவர் பி.வி. பாபு. அண்மையில் தன் வீட்டில் சலவை இயந்திரம் பழுதானதை அடுத்து, அதனைச் சரிசெய்வதற்காக ஜனார்த்தனன் காதம்பரி என்ற தொழில்நுட்பரின் உதவியை அவர் நாடினார்.

அதனையடுத்து, அவரது வீட்டிற்குச் சென்ற ஜனார்த்தனன், சலவை இயந்திரத்தைப் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டார். சில வேலைகளைச் செய்தபிறகு இயந்திரத்தை இயக்க முயன்றார். இயந்திரத்தினுள் ஏதோ சுழல்வதைக் கண்ட அவர், துணி என நினைத்து, அதனை எடுப்பதற்காக உள்ளே கையைவிட்டார்.

அது கருநாகம் என்பதை உணர்ந்ததும், வெடுக்கென கையை வெளியில் இழுத்தார் அவர். உடனடியாக அதுகுறித்து வீட்டில் இருந்தவர்களுக்கும் விழிப்பூட்டினார்.

அதுபற்றி விவரித்த வீட்டு உரிமையாளர் பாபு, “கடந்த இரு வாரங்களாகவே சலவை இயந்திரம் வேலைசெய்யவில்லை. அதன் மூடியும் மூடப்பட்டிருந்தது. அதற்குள் கருநாகம் எப்படிச் சென்றது எனத் தெரியவில்லை. ஜனார்த்தனன் கையைவிட்டதும், உள்ளே இருந்த கருநாகம் சீறியது. நல்ல வேளையாக அவர் தப்பிவிட்டார்,” என்று விவரித்தார்.

அதனைத் தொடர்ந்து, மலபார் வனவிலங்கு விழிப்புணர்வு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த அனில் திருச்சம்பரம் என்ற வனவிலங்கு மீட்பு அலுவலரை பாபு தொடர்புகொண்டார். அவர் சலவை இயந்திரத்திலிருந்த அந்தக் கருநாகத்தைப் பிடித்துச் சென்றார்.

“சலவை இயந்திரத்தினுள் கருநாகத்தை நான் கண்டது இதுவே முதன்முறை. அது பிறந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் இருக்கலாம். கழிவுநீர்க் குழாய் வழியாக அது உள்ளே வந்திருக்கலாம்,” என்று அனில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்