நகரி: நடிகர் அல்லு அர்ஜுன் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக பேசப்படுகிறது.
ஆனால் சட்டம் அதன் கடமையைச் செய்துள்ளது என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
அண்மையில் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜுன், கடந்த 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்குக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்கச் சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா திரையரங்குக்குச் சென்றனர்.
இதனால் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் ‘புஷ்பா 2’ படம் பார்க்க வந்த ரேவதி. 35 என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா, 9 ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி நிலைத் தடுமாறி விழுந்தனர்.
அந்த சமயத்தில் நெரிசலில் ரசிகர்கள் பலர் இருவர் மீது ஏறி மிதித்துவிட்டனர். இருவரும் சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரது தாயார் ரேவதி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தொலைக்காட்சி ஒளிவழியின் நேர்காணலில் பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுன் கைது நடவடிக்கையில் அரசியல் தலையீடு இல்லை என்று கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“உயிர் போனாலும் வழக்கு பதிவு செய்யக்கூடாதா. நடிகர் சினிமாவில் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். அவ்வளவுதான். அவர் என்ன இந்திய எல்லையில் பாகிஸ்தானை எதிர்த்து போராடியவரா. சட்டம் தன் கடமையை செய்துள்ளது. இதில் நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் என்ற வேறுபாடு கிடையாது. சட்டப்படி கைது நடவடிக்கை நடந்துள்ளது. இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை,” என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அல்லு அர்ஜுன் பின்னர் நம்பள்ளி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது, விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், அல்லு அர்ஜுனை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதால் அவர் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுனா தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால பிணை வழங்கி வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டது.
இதையடுத்து சனிக்கிழமை காலை (டிசம்பர் 14) அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன், “நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் முதலில் எனது நன்றி. நான் பாதுகாப்பாக உள்ளேன், எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அதனால் விசாரணைக்கு கண்டிப்பாக ஒத்துழைப்பேன்,” என்று கூறினார்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர், “வழக்கை மீட்டுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அல்லு அர்ஜுனுக்கும் என் மனைவி இறந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அல்லு அா்ஜுன் அறிவித்துள்ளார்.