பாம்பை வாயில் வைத்து சாகசம் செய்த இளைஞர் மரணம்

1 mins read
def4d8c4-5b7b-4476-84dd-f11848c3d34f
தெலுங்கானாவின் கமரெட்டி மாவட்டத்தில் உள்ள தேசிபேட் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ், 20, சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில், நாகப்பாம்பின் தலையை வாய்க்குள் வைத்து காணொளி ஒன்றைப் பதிவு செய்ய முயன்றார். - படம்: இந்திய ஊடகம்

தெலுங்கானா: தெலுங்கானாவின் கமரெட்டி மாவட்டத்தில் உள்ள தேசிபேட் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ், 20, சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில், நாகப்பாம்பின் தலையை வாய்க்குள் வைத்து காணொளி ஒன்றைப் பதிவு செய்ய முயன்றார்.

ஆனால் அந்த சாகசத்தால் அவர் உயிரிழந்தார்.

பாம்பு பிடிப்பவராகத் தனது தந்தையுடன் பணியாற்றி வந்த சிவராஜ், தனது தந்தையுடன் சேர்ந்து ஒரு நாகப்பாம்பைப் பிடித்தார். ‘வாட்ஸ்அப்’ல்’ பகிர்வதற்காக பாம்புடன் காணொளி பதிவு செய்யுமாறு அவரது தந்தை அவரை ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது இணையத்தில் வலம்வரும் அந்தக் காணொளியில், சிவராஜ் சாலையின் நடுவில் நாகப்பாம்பின் தலையை வாய்க்குள் வைத்துக்கொண்டு நிற்பதைக் காணமுடிகிறது.

பாம்பு தப்பிக்க முயற்சி செய்வதையும் சிவராஜ் மடித்த கைகளுடன் புகைப்படக் கருவியைப் பார்ப்பதையும் காணொளியில் காணமுடிகிறது.

பாம்புகளைப் பற்றிய அனுபவம் இருந்தபோதிலும், சிவராஜை அந்த நாகப்பாம்பு உடனடியாகக் கடித்து, அதிக அளவு விஷத்தைக் கக்கியது. அதனால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

அவரது மரணம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் பிரபலமடைய மக்கள் எந்த அளவுக்கு ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்ற கேள்வியைப் பலர் எழுப்பியுள்ளனர்.

அந்தக் காணொளி தற்போது இணையத்தில் பரவிவரும் நிலையில், இளைஞர்கள் சமூக ஊடகப் புகழுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்று அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்