ஹைதராபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த, ‘மர மனிதர்’ (Tree Man) என்று பிரபலமாக அறியப்பட்டவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான தாரிபள்ளி ராமையா உடல்நலக்குறைவால் சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலமானார். அவருக்கு வயது 87.
ராமையா தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபள்ளி கிராமத்தில் உள்ள தமது வீட்டில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, கம்மம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சமூக வனப் பணியில் ஈடுபட்ட ராமையா நட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கையை அவரால் சரியாக நினைவுகூர முடியாவிட்டாலும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரங்கன்றுகளை அவர் நட்டதாக மதிப்பிடப்படுகிறது.