ஹைதராபாத்: பாலியல் புகாரில் சிக்கிய தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கொனட்டி ஆதிமூலம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை அக்கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவர் பி. ஸ்ரீநிவாசராவ் அறிவித்துள்ளார்.
திருப்பதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்குத் தன்னை அழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாரென தெலுங்கு தேசம் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் ஆதிமூலம் மீது, திருப்பதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அவர் கணொளி ஆதாரங்களுடன் வியாழக்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அதையடுத்து அந்த சட்ட மன்ற உறுப்பினர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தது. இதில் 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளைத் தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வரானார்.
முன்னதாக, தமிழர்கள் அதிகமாக வசிக்கும் சித்தூர் மாவட்டத்தின் சத்யவேடு தொகுதியைச் சேர்ந்த ஆதிமூலம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து சத்யவேடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நேற்று திருப்பதியைச் சேர்ந்த ஒரு பெண், ஹைதராபாத் செய்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சட்ட மன்ற உறுப்பினர் ஆதிமூலம் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.
அந்த பெண் கூறுகையில், “தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவள் தான் நான். திருப்பதி என்னுடைய சொந்த ஊராகும். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பிரசாரத்தின் போது, சத்யவேடு தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்ட சட்ட மன்ற உறுப்பினர் ஆதிமூலம் திருப்பதியில் உள்ள ஒரு பிரபல விடுதியில் தங்கி இருந்துதான் பிரசாரம் செய்தார். அப்போதுதான் அவருடைய அறிமுகம் ஏற்பட்டது.
பழக்கம் ஏற்பட்ட சில நாட்களிலேயே என்னுடைய தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு, அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்தார்.
ஒரு நாள், என்னை உடனடியாக திருப்பதியில் அவர் தங்கி இருந்த அந்த பிரபல விடுதிக்கு வரச்சொன்னார். அப்போது, அவர் என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார். அதற்கு நான் இடம் கொடுக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
ஆனாலும், தொடர்ந்து தொல்லை கொடுத்தார். எப்படியாவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவு கட்டினேன். அதனால், நான் அவரது அறையில் என்னுடைய கைத்தொலைபேசியில் காணொளி எடுத்து அதன் மூலம் அவர் தகாத முறையில் பேசியதைப் பதிவு செய்தேன் என்று கூறிய அந்தப் பெண், அந்தக் காணொளியை செய்தியாளர் கூட்டத்தில் போட்டுக் காட்டினார்.
இதுபோன்றவர்களால்தான் பெண்கள் அரசியலுக்கு வரவே அஞ்சுகின்றனர். மேலும் இப்போது அரசியலில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு அறவே பாதுகாப்பு இல்லை. எனவேதான் நானே முன்வந்து இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளேன் என்றார்.
இதையடுத்து தெலுங்கு தேசம்கட்சியின் ஆந்திர மாநிலப் பிரிவின் தலைவர் பி. ஸ்ரீநிவாசராவ், சத்யவேடு சட்ட மன்ற உறுப்பினர் ஆதிமூலத்தை கட்சியில் இருந்து இடை நீக்கம்செய்வதாக அறிவித்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.