ஹைதராபாத்: அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
2016ஆம் ஆண்டு 3.2 லட்சமாக இருந்த அவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 12.3 லட்சமாக உயர்ந்துள்ளது.
நான்காவது தலைமுறையாக அந்நாட்டில் குடியேறியவர்கள் முதல் அண்மையில் படிப்பதற்காக அங்கு சென்ற மாணவர்கள் வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கலிஃபோர்னியாவில் அதிக எண்ணிக்கையில் தெலுங்கு பேசும் மக்கள் இருப்பதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புப் பிரிவு தரவுகளின்படி தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கலிஃபோர்னியாவில் வசிக்கின்றனர்.
மேலும், டெக்சாசில் 1.5 லட்சம் பேரும் நியூஜெர்சியில் 1.1 லட்சம் பேரும் இல்லினோயில் 83,000 பேரும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இருக்கும் உள்ளூர் தெலுங்கு சங்கங்கள் இந்த எண்ணிக்கைத் தங்களுடைய சொந்த மதிப்பீடுகளுடன் ஒத்துப்போவதாக கூறுகின்றன.

