ஹைதராபாத்: தெலுங்கானாவில் சில முக்கியச் சாலைகளுக்கு அதிபர் டிரம்ப், ரத்தன் டாடா, கூகல் பெயரை சூட்ட தெலுங்கானா அரசு முடிவுசெய்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெல்லியில் நடைபெற்ற USISPF மாநாட்டில் பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, தெலுங்கானாவில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத்தின் மிக முக்கியச் சாலைக்கு ‘டோனல்ட் டிரம்ப் அவென்யூ’ என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகத்திற்கு தெலுங்கானா அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும், ஹைதராபாத்தில் ரவிர்யாலாவில் நேரு வெளிவட்டச் சாலையை இணைக்கும் புதிய கிரீன்பீல்டு சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. முன்னதாக, ரவிர்யாலா மாற்றுச் சாலைக்கு ‘டாடா இன்டர்சேஞ்ச்’ என்று பெயர் மாற்றப்பட்டது. கூகல் நிறுவனத்தைச் சிறப்பிக்கும் விதமாக, ஹைதராபாத்தின் முக்கியச் சாலைக்கு ‘கூகல் தெரு’ என்று பெயரிடப்பட இருக்கிறது.
அதுபோல, மைக்ரோசாஃப்ட் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் பெயர்களையும் சாலைகளுக்கு வைப்பது தொடர்பாக தெலுங்கானா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

