சிங்கபெருமாள்கோவில்: சென்னை அருகே சிங்கபெருமாள்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.10.66 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனர்.
சிங்கபெருமாள்கோவில் பகுதியில் சுமார் 1,200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் அப்பகுதியில் உள்ளன. இந்நிலையில், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.ஜே. நகர் பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியிருந்தனர்.
இதுகுறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் இடத்தைக் காலி செய்யவில்லை. அதையடுத்து, அறநிலையத்துறை நில மீட்புக்குழு வட்டாட்சியர் கவிதா தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர்.
மீட்கப்பட்ட இந்த 4 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.10.66 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட இடத்தில் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்பதற்கான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

