வயநாடு: அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் திருடப்பட்டதற்கு யார் பொறுப்பேற்பது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காணிக்கைகள் திருடப்பட்டிருப்பது அவமானகரமானது என்றார்.
காணிக்கைகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, அவற்றைச் சேகரித்தவர்தான் அவற்றைப் பாதுகாக்கவும் வேண்டும் என்றார் பிரியங்கா.
காணிக்கைகள் அனைத்தும் பொது மக்களால் வழங்கப்பட்டவை என்றும் பெண்கள் பலர் தங்கள் சேமிப்பில் இருந்து அவற்றை வழங்கியுள்ளனர் என்றும் பிரியங்கா சுட்டிக்காட்டினார்.
“ஏழை மக்களும் தங்களால் இயன்ற காணிக்கையை வழங்கியுள்ளனர். பெரிய நிறுவனங்கள் மட்டும் நிதி வழங்கவில்லை. சாதாரண குடிமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதியும் அதில் அடங்கும்.
“காணிக்கைகளைச் சேகரிப்பதற்காக தனியாக ஓர் இயக்கமே நடத்தப்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது,” என்றார் பிரியங்கா காந்தி.
அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு தொடர்பாக ஜூன் 7ஆம் தேதி தகவல் வெளியானது.
இதையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்குமாறு கோவில் அறக்கட்டளை உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
அதை ஏற்று அமைக்கப்பட்ட விசாரணைக்குழு கடந்த 25ஆம் தேதி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து எட்டுப் பேரைக் கைது செய்துள்ளது.
இதனிடையே ராமர் கோவில் அறக்கட்டளை தலைவரும் அதன் உறுப்பினர்களும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

