கோவில் சொத்துகள் கடவுளுக்கு உரியவை, அரசுக்கு அல்ல: உச்ச நீதிமன்றம்

கோவில் சொத்துகள் கடவுளுக்கு உரியவை, அரசுக்கு அல்ல: உச்ச நீதிமன்றம்

கோப்புப் படம்: தினமலர்

20 Oct 2026 - 6:25 pm

1 mins read

புதுடெல்லி: கோவில் சொத்துகள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தமானவை. அவற்றை அரசு கையகப்படுத்தவோ அல்லது சொந்தம் கொண்டாடவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள நாகபாளையம் மாரியம்மன், பொன்னாச்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 10 சென்ட் நிலத்தை, தாலுகா அலுவலகம் கட்டுவதற்காகத் தமிழக அரசுக்குத் தற்காலிக அறங்காவலர் ஒருவர் 2017ல் தானமாக வழங்கினார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், கோவில் சொத்துகளின் பாதுகாவலராக மட்டுமே அரசு செயல்பட முடியும். நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு இருந்தாலும், நிலத்தின் உரிமையாளராக அரசு மாற முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்தர்களாலும் அரசர்களாலும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிலங்களை அறங்காவலரோ அல்லது அரசோ தன்னிச்சையாகத் தானம் கொடுக்கவோ, விற்கவோ முடியாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.

கோவில் நிலத்தில் ஏற்கெனவே தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருப்பதால், அந்த நிலத்தை அரசு தொடர்ந்து பயன்படுத்த நீதிமன்றம் விலக்களித்துள்ளது. எனினும், நிலம் ஒப்படைக்கப்பட்ட 2019 மார்ச் 8 முதல் மாதந்தோறும் ரூ.31,000 வாடகையை கோவில் நிர்வாகத்திற்கு நிலுவைத் தொகையுடன் அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்