கோவிலின் சொத்துகளைக் கூட்டமாகக் கொள்ளையடித்துள்ளனர்: கேரள உயர் நீதிமன்றம்

2 mins read
56c916b4-849c-4c34-b7ab-12ed8c15aaff
கேரள உயர் நீதிமன்றம். - படம்: தி இக்கானமிக் டைம்ஸ்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலின் சொத்துகளைச் சிலர் கூட்டமாகச் சேர்ந்து கொள்ளையடித்துள்ளதாக கேரள உயர் நீதிமன்றம் காட்டத்துடன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள மூன்று பேரின் பிணை மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதி ஃபக்ருதீன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சபரிமலை கோவிலில் நான்கு கிலோ தங்கம் மாயமானது கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் கோவில் ஊழியர்கள், கோவில் நிர்வாகத்தைப் சேர்ந்த அதிகாரிகள் உள்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களில் மூன்று பேர் தங்களுக்குப் பிணை கோரி கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். இவர்கள் மனுக்கள் மீதான விசாரணை திங்கட்கிழமை (ஜனவரி 21) விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தங்கம் திருடப்பட்டது தொடர்பாக நீதிபதி ஃபக்ருதீன் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

திருட்டுப்போன 4.1 கிலோ தங்கத்தில் இதுவரை 400 கிராம் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் மீதமுள்ள தங்கத்தை காவல்துறை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐயப்பன் கோவிலில் சொத்துகளைக் கூட்டமாகச் சேர்ந்து கொள்ளையடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த திருட்டில் மேலும் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பதைக் காவல் துறையினர் கண்டுபிடிக்க வேண்டுமென்றார்.

இதனிடையே, இந்தத் திருட்டு விவகாரத்தில் கைதாகியுள்ளவர்களின் ரூ.1.3 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கோவில் நிர்வாகத் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 26 இடங்களில் இரு‌தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தி பல்வேறு முக்கியமான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள நிறுவனத்திடம் இருந்து 100 கிராம் தங்கக்கட்டி கைப்பற்றப்பட்டது‌.

“சபரிமலை கோவிலுக்குச் சொந்தமான தங்கத்தகடுகளைச் செம்புத்தகடுகள் என்று குறிப்பிட்டு போலி ஆவணங்களைத் தயாரித்து தங்கம் அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பான போலி ஆவணங்களும் தற்போது கிடைத்துள்ளன,” என்று ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்