கோவில் சொத்து விவரங்கள்: 2 வாரங்களில் அறிக்கை வழங்க நீதிமன்றம் உத்தரவு

கோவில் சொத்து விவரங்கள்: 2 வாரங்களில் அறிக்கை வழங்க நீதிமன்றம் உத்தரவு

படம்: இணையம்

29 Oct 2025 - 8:57 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில் சொத்து விவரங்கள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தணிக்கை விவரங்கள், கோவில் இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள், பதிவேற்றம் செய்யப்படாத விவரங்கள் உள்ளிட்டவற்றை வழங்குமாறு அது கூறியுள்ளது.

தமிழக கோவில்கள் தொடர்பான ஒப்பந்தப் புள்ளிகள், கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள், சொத்துகள் தொடர்பான பதிவேடுகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை இணையத்தளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் அருண் நடராஜன், கோயில் நிலங்கள் குறித்து ஆவணங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தால் முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

வருவாய்த் துறையின் தமிழ் நிலம் என்ற இணையத்தளத்தில் கோவில் நிலங்கள் குறித்து அனைத்து விவரங்களும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அப்போது நீதிபதி லட்சுமி நாராயணன், கோயில் சொத்து விவரங்கள், தணிக்கைக் கணக்கு விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் தயக்கம் ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் கோயில் சொத்து விவரங்களை இணையத்தில் வெளியிட நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் கேட்டார்.

தொடர்ந்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மொத்தம் 44,121 கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றில் 8,450 கோயில்கள் நூறு வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டவை. இந்தக் கோயில்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கும்நிலையில், பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. 

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் நோக்கத்துடன் பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டு மாநிலம் முழுவதுமிருந்து கோயில் நிலங்களைப் பாதுகாப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.

இதுகுறித்த விசாரணையின்போது, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும், அந்த நிலங்களுக்கு வாடகை நிர்ணயிக்க வேண்டும், கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும், கோயில் நிலங்கள் தொடர்பான மனுக்களை விசாரிக்க தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், கோயில் சிலைகள், நகைகள் குறித்த விவரங்களைப் பட்டியல் போட வேண்டும் என்று பல உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்