சினிமா, அரசியல் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்தமான கடவுளுக்கு கோவில் கட்டுவார்கள்.
தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய பிரபலங்களின் புகைப்படங்களை வீட்டில் வைத்து வணங்குபவர்களும் உண்டு.
பிரபலங்களின் அதிதீவிரமான அபிமானிகளும் ரசிகர்களும் தங்களின் விருப்பத்திற்குரியவர்களுக்கு கோவில் கட்டுகிறார்கள்.
சினிமா, அரசியல் பிரபலங்களின் மனிதநேயத்தைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்காக கட்டப்பட்ட சில கோவில்களைப் பற்றி பார்க்கலாமா!
எம்.ஜி.ஆர். கோவில்
“எம்.ஜி.ஆர். படங்கள் என் வாழ்க்கைக்கு பாடங்கள். அவரின் மனிதநேயமும் கொடைத்தன்மையும் அவரை என் கடவுளாக்கியது. அதனால் என் மனைவியின் நகைகளை விற்று ‘அருள்மிகு ஸ்ரீ எம்.ஜி.ஆர். ஆலயம் கட்டினேன்,” எனக் கோவிலை அமைத்த கலைவாணன் ஏற்கெனவே சொல்லியிருந்தார்.
சென்னையை அடுத்த நத்தமேடு என்கிற இடத்தில் இருக்கிறது எம்.ஜி.ஆர் கோவில். மற்ற பிரபலங்களுக்கு கட்டப்பட்ட கோவில்களை விட, இக்கோவில் உரிய ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரம், கருவறை, மூலவர், உற்சவர் என சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், நன்னீர், மூலிகைப்பொடி என ஏழு விதமான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் திருவிழா, தேரோட்டம் எம்.ஜி.ஆர் கோவிலில் நடக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கோவில்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இந்தக் கோவில்.
முன்பு அமைச்சராக இருந்த ஆர்.பி. உதயகுமார் தலைமைச் செயலக வளாகத்தில் செருப்பு இல்லாமல்தான் நடப்பார். “என்னோட தெய்வம் (முதல்வராக இருந்த ஜெயலலிதா) இருக்கிற இடத்தில் நான் காலணி அணிந்து நடக்க மாட்டேன்,” என காரணம் சொன்னார்.
இதையறிந்த ஜெயலலிதா “கால்களுக்கு பாதுகாப்பு வேணாமா? முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் போட்டுக்கோங்க” எனச் சொன்ன பிறகே போட்டுக் கொண்டார்.
அவ்வளவு தீவிர அபிமானியான உதயகுமார் தனக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் கோவிலை அமைத்துள்ளார்.
ஏழடி உயரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச்சிலை வெண்கலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இருவர் அருகிலும் சிங்கம் இருப்பது போலவும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமிதாப் கோவில்
பாலிவுட் நாயகன் அமிதாப் பச்சன் காதலித்து திருமணம் செய்த ஜெயா கோல்கத்தாவைச் சேர்ந்தவர். அதனால் அமிதாப்பை “கோல்கத்தாவின் மருமகன்” என அந்த மக்கள் கொண்டாடுவார்கள்.
தெற்கு கோல்கத்தாவில் ‘ஜெய் ஸ்ரீ அமிதாப் கோவில்’ அமைக்கப்பட்டுள்ளது. ஆறடி உயர ஃபைபர் கிளாஸ் சிலை உட்கார்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
சோனு சூட் கோவில்
தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருபவர் சோனு சூட். ‘அருந்ததி’, ‘ஒஸ்தி’, ‘கள்ளழகர்’ உள்பட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் வில்லனாக நடித்தாலும், ‘உண்மையான கதாநாயகன்’ என தெலுங்கானா ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
காரணம்…..
மனிதநேயத்தோடு சோனு செய்யும் உதவிகள்தான். தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும் உள்ள சொத்துக்களை பத்து கோடி ரூபாய்க்கு அடைமானம் வைத்து, கொரோனா சமயம் மக்களுக்கு உதவியவர்.
குறிப்பாக வெளிமாநிலங்களில் வேலை இழந்து, சொந்த மாநிலம் திரும்பியவர்களுக்கு ஏகப்பட்ட உதவிகள் செய்தார் சோனு.
ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்களை கொரோனா சமயம் தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து சேர்த்தார்.
இவரின் மனிதநேயத்தை கௌரவிக்க தெலுங்கானா மாநிலம் சித்திபேட் எனும் ஊரில் சோனு சூட்டிற்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
சமந்தா கோவில்
சமந்தா தன் சினிமா சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை அறக்கட்டளைகள் மூலம் ஏழைகளுக்கு கொடுக்கிறார். இதனால் சமந்தா மீது மதிப்பு கொண்ட ரசிகர் செனாலி சந்தீப், ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், ஆலப்பாடு கிராமத்தில் தன் வீட்டு வளாகத்திலேயே சமந்தாவுக்கு கோவில் கட்டியுள்ளார்.
ரஜினி கோவில்
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்தி சிறுவயது முதலே ரஜினி ரசிகர். அவரின் குடும்பத்தார் அனைவருமே ரஜினி ரசிகர்கள் தான்.
வீட்டில், தனது அலுவலகம் செயல்படும் பகுதியில் உள்ள சிறு அறையில் ரஜினிக்கு கருங்கல் சிலை அமைத்து, பூசைகள் செய்து வருகிறார்.
ரஜினி சிலையை நோக்கி கழுகு சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 வருடங்களாக சினிமாவில் உயர உயரப் பறந்து கொண்டிருக்கிறது ரஜினியின் புகழ். அதனால் கழுகு சிலை வைத்துள்ளனர் கார்த்தி குடும்பத்தினர்.
ரகசிய கோவில்
நடிகை நிதி அகர்வாலுக்கு (‘பூமி’, ‘ஈஸ்வரன்’ பட நடிகை) சிலை வைத்து, அபிஷேகம் செய்து, கோவில் எங்கே இருக்கிறது என்பதைச் சொல்லாமல் படங்களை மட்டும் வெளியிட்டனர்.
“கல்விக்கும் உணவுக்கும் உதவுங்கள். எதற்கு இதெல்லாம்? உங்களுக்கு நன்றி” என நித்தி அறிவுரை கூறியுள்ளார்.
அம்பிகை ஆக்காதீங்க!
“நயன்தாராவான என்னை ‘நயனாம்பிகை’ ஆக்காதீங்க” என நயன் அறிக்கை விடுகிற அளவுக்கு போய்விட்டது ரசிகர்களின் அன்பு.
‘கோவில் கட்டணும்; அனுமதி தாங்க’ என ரசிகர்கள் நச்சரித்ததால் இந்த அறிக்கை வெளியானது.
இடிக்கப்பட்ட கோவில்
நடிகைகளில் முதன்முதலில் திருச்சி –கரூர் பகுதியில் தான் குஷ்புவுக்கு கோயில் கட்டப்பட்டது. ஆனால் சில வருடங்களில் அந்தக் கோவில் இடிக்கப்பட்டுவிட்டது.
“ஆலயம் கட்டுவதில் அக்கறை காட்டும் ரசிகர்கள், அபிமானிகள், அறக்கட்டளை அமைத்து அத்தியாவசிய உதவிகள் செய்யலாம்,” என்பதுதான் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த அறிவுரையாக உள்ளது.