‘டெலிகிராம்’ செயலிக்கு இந்தியாவில் தற்காலிகத் தடை

‘டெலிகிராம்’ செயலிக்கு இந்தியாவில் தற்காலிகத் தடை

2 mins read
726dc23b-b7d7-4cdf-b9e1-959452668d4a
ஜூன் 22ஆம் தேதி முதல் செயலி வழக்கம்போல் செயல்படும் என்று கூறப்பட்டது. - படம்: பிக்சாபே

புதுடெல்லி: இந்தியாவில் நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தத் தேர்வு முடியும் வரையில் ‘டெலிகிராம்’ செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

இந்தத் தடையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு உறுதிசெய்துள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல் செயலி வழக்கம்போல் செயல்படும் என்று கூறப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மருத்​து​வம் மற்​றும் பல் மருத்​துவப் படிப்பு மாணவர் சேர்க்​கைக்​காக நீட் (இளங்கலை மாணவர்) நுழைவுத்​தேர்வு நடத்தப்படுகிறது.

அந்த வகை​யில், நடப்புக் கல்வி ஆண்டு சேர்க்கைக்​கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடந்​தது. வினாத்​தாள் கசிந்ததால் அத்​தேர்வு ரத்​து செய்​யப்​பட்டது.

இதையடுத்து நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடத்தப்​படும் என்றும் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை அறி​வித்​தது.

இந்நிலையில், நீட் மறுதேர்வுக்கான தேர்வு அட்டையைத் தேர்வு எழுதும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

‘டெலிகிராம்’ செயலி வழித் தேர்வு தொடர்பான மோசடிகள் இடம்பெறலாம் அதனால் செயலியைத் தற்காலிகமாக முடக்குவதாக அதிகாரிகள் கூறினர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

சமூக ஊடகம் மூலம் பிரபலமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், டெலிகிராம் செயலியில் ஜூன் 30 வரை குறுஞ்செய்தியில் உள்ள ‘எடிட்’ அம்சத்தை தற்காலிகமாகத் தடை செய்யுமாறும் கோரிக்கை எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாள்களாகச் சமூக ஊடகங்கள்மூலம் நீட் மறுதேர்வு வினாத்தாள் எனக் கூறி சில மோசடிக் கும்பல்கள், பெற்றோர்களிடம் இருந்து ஆயிரத்திலிருந்து லட்சக்கணக்கில் வசூலிக்க முயற்சி செய்வது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சட்டவிரோத மோசடியில் ஈடுபடும் கும்பல்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. தவிர, ஏமாற்று வேலையில் ஈடுபடும் நபர்களைக் கண்டறியத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்