இந்தியத் தாக்குதலில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் பத்துப் பேர் கொல்லப்பட்டனர்

1 mins read
91b89448-f1ce-44c4-93ac-c28f49eaecb2
தன் குடும்பத்தினர் பத்துப் பேர் கொல்லப்பட்டதை ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மௌலானா மசூத் அசாரே தெரிவித்துள்ளதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், பகவல்பூர் நகரில் இந்தியா நடத்திய தாக்குதலில் தன் குடும்பத்தினர் பத்துப் பேரும் உதவியாளர்கள் நால்வரும் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மௌலானா மசூத் அசார் ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளதாக பிபிசி உருது செய்தி தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய அமைப்புகள் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலும் நிறுவியிருந்ததாகக் கூறப்படும் ஒன்பது பயங்கரவாத முகாம்கள்மீது இந்தியா புதன்கிழமை (மே 7) அதிகாலை அதிரடித் தாக்குதல் நடத்தியது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுப்பயணிகள் உள்ளிட்ட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

‘ஆப்பரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், பகவல்பூரிலுள்ள சுபான் அல்லா வளாகமும் குறிவைத்துத் தாக்கப்பட்டது.

அந்த சுபான் அல்லா வளா[Ϟ]கமே ஜெய்ஷ் அமைப்பின் செயற்பாட்டுத் தலைமையகமாக விளங்கியது என்று இந்திய அதிகாரிகள் அடையாளம் கண்டதாகவும் அங்கிருந்துதான் புல்வாமா, பதான்கோட் உள்ளிட்ட முக்கியப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதாகவும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதில், தன் குடும்பத்தைச் சேர்ந்த, ஐந்து குழந்தைகள் உட்பட பத்துப் பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று மசூத் அசார் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மாண்டோருக்கான இறுதிச்சடங்குகள் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்