ஜம்மு: இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், டோடா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் சாலையிலிருந்து வழுக்கிச் சென்று 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் பத்துப் பேர் உயிரிழந்தனர்; மேலும் 11 பேர் காயமுற்றனர்.
வியாழக்கிழமை (ஜனவரி 23) பிற்பகலில் இவ்விபத்து நேர்ந்தது.
தகவலறிந்து ராணுவமும் காவல்துறையும் இணைந்து உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. விபத்து நேர்ந்த இடத்திலேயே நால்வர் இறந்துவிட்டனர். காயமடைந்த பத்து வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கும் இன்னொருவர் பதெர்வா துணை மாவட்ட மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.
இவ்விபத்து குறித்து மாநில ஆளுநர் மனோஜ் சின்காவும் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மாண்டோரின் குடும்பத்தாரிடம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர் அப்துல்லா, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். உடனடியாக விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களையும் அவர் பாராட்டினார்.
“டோடாவில் நேர்ந்த சாலை விபத்தில் துணிச்சல்மிக்க நமது பத்து ராணுவ வீரர்களை இழந்துவிட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்களது உன்னத சேவையையும் தியாகத்தையும் என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்,” என்று ஆளுநர் சின்கா தெரிவித்துள்ளார்.

