பலோத்ரா: மனைவி, பிள்ளைகள் செலவழித்துவிடுவார்கள் அல்லது திருட்டு நடந்துவிடும் என்ற அச்சத்தில் மண்ணுக்குள் புதைத்து வைத்த ஐந்து லட்சம் ரூபாயைக் கரையான்கள் அழித்துவிட்டன.
அந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பலோத்ரா மாவட்டத்திற்குட்பட்ட நேவாய் என்னும் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
மன்கிலால் மெக்வால் என்னும் விவசாயி ஓராண்டுக்கு முன்னர் தமது நிலத்தை விற்றார். அதன்மூலம் கிடைத்த ஐந்து லட்சம் ரூபாயை பிளாஸ்டிக் பை ஒன்றில் வைத்து தமது பண்ணை நிலத்தில் புதைத்து வைத்தார்.
நிலம் விற்ற பணம் எங்கே என்று கேட்ட மனைவியிடமும் பிள்ளைகளிடமும் அதைப் பதுக்கி வைக்கப்பட்ட இடத்தைச் சொல்லவில்லை.
நாள்கள் கடந்த நிலையில், பண்ணை நிலத்தில் அறை ஒன்றைக் கட்ட விரும்பிய மன்கிலால், புதைத்து வைத்திருந்த பணத்தை அதற்காகப் பயன்படுத்த நினைத்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக தமது ஆறு ஏக்கர் பண்ணை நிலத்தில் பணம் புதைக்கப்பட்ட இடத்தை அவர் மறந்துவிட்டார்.
முடிந்தவரை நிலத்தின் எல்லாப் பக்கத்திலும் தேடிப் பார்த்து பணம் கிடைக்காத நிலையில், தமது குடும்பத்தினரிடம் அது பற்றித் தெரிவித்தார்.
இப்படியெல்லாம் அவர் செய்திருப்பாரா என்று முதலில் நம்ப மறுத்த மனைவியும் பிள்ளைகளும் பின்னர் மன்கிலாலுடன் சேர்ந்து அவர்களும் நிலத்தில் பணத்தைத் தேடினர். ஆனாலும், பணம் கிடைக்கவே இல்லை.
அந்தச் சம்பவம் நிகழ்ந்த ஓராண்டுக்குப் பின்னர், பருவமழைக் காலத்தில் விதைப்பதற்காக நிலத்தைத் தயார் செய்தபோது பிளாஸ்டிக் பை ஒன்று கண்களில் பட்டது.
மன்கிலாலின் குடும்பத்தினர் ஆவலுடன் அந்தப் பையைத் திறந்தபோது அவர்களுக்கு வேதனைதான் மிஞ்சியது. ஐந்து லட்சம் ரூபாய் பணமும் கரையான்களால் அரிக்கப்பட்டிருந்தது. சேதமுற்ற பணத்தில் பெரும்பாலானவை 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. அவை துகள் துகள்களாக சிதைந்து போயிருந்தன. அதனை ஏற்க வங்கிகளும் மறுத்துவிட்டதால் அந்தக் குடும்பம் வேதனையில் மூழ்கியது.
சேதமடைந்த அந்தப் பணத்தை பாச்பாத்ரா என்னுமிடத்தில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு அவர்கள் கொண்டு சென்று கொடுத்தனர். பாதிப் பணமாவது கிடைக்கும் என்ற அவர்களின் ஆசை நிறைவேறவில்லை.
அந்தப் பணத்தை ஏற்க வங்கி மறுத்துவிட்டது. பலோத்ராவில் உள்ள மற்றொரு ஸ்டேட் வங்கியிடம் சென்றபோதும் அங்கு சேதமடைந்த பணம் நிராகரிக்கப்பட்டது.
அதனால், வருத்தம் மேலிட நிலைகுலைந்த குடும்பத்தினர், மன்கிலாலின் செயலைக் கண்டித்தனர். மறைத்து வைக்க நினைத்தவர் அதனை வங்கியிலாவது போட்டு வைத்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.


