ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலை அடுத்து, அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய அரசை அதன் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான யாத்திரை இன்னும் சில நாள்களில் தொடங்க உள்ளது.
நாள்தோறும் 30,000க்கும் மேற்பட்டோர் அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த யாத்திரை இரண்டு பாதைகள் வழியே மேற்கொள்ளப்படுகிறது. அவற்றில் ஒரு பாதை, பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பஹல்காம் வழியே செல்கிறது.
அங்கு தாக்குதல் நடத்திய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்னும் நடமாடுவதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களைத் தாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் அருகே உள்ள பஞ்சால் காட்டுப்பகுதியில் மறைந்திருந்து, தாக்குதலை அரங்கேற்ற வாய்ப்புள்ளதாக உளவுத்துறையினர் கருதுகின்றனர்.
இதுதொடர்பாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, மத்திய உள்துறை அமைச்சு, மத்திய ரிசர்வ் போலிஸ் படை ஆகியவற்றின் அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, அமர்நாத் யாத்திரைக்காக பக்தர்கள் பயன்படுத்தும் பாதை முழுவதும் கூடுதலாக பாதுகாப்பு போடவும் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த வட்டாரங்களில் சற்றே பதற்றம் நிலவுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காம் தாக்குதலுக்கு அடுத்து, இந்திய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்போது, பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதிகள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இதில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் நிலவியது. எனினும், பின்னர் பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு வேண்டுகோள் விடுத்ததையடுத்து, எல்லையோரப் பதற்றம் குறைந்துள்ளது.