புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் 26 பேரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதை அடுத்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் மற்ற இந்திய மாநிலங்களில் மிரட்டலையும் துன்புறுத்தலையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைவர்கள் இந்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவர் மெஹ்பூபா முஃப்தி, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தொடர்புகொண்டு பேசினார்.
“அமித்ஷாவைத் தொடர்புகொண்டு, பயங்கரவாதத் தாக்குதலில் மாண்டோருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்தினேன். அத்துடன், பல்வேறு மாநிலங்களில் சில அமைப்புகள் காஷ்மீரி மாணவர்களுக்கும் வணிகர்களுக்கும் நேரடி மிரட்டல் விடுத்ததை அவரது கவனத்திற்குக் கொண்டுசென்று, மத்திய அரசு அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன்,” என்று தமது எக்ஸ் பக்கத்தில் திருவாட்டி முஃப்தி பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, உத்தராகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள காஷ்மீரி முஸ்லிம்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்றும் இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் இந்து ரக்ஷா தள் என்ற வலதுசாரி அமைப்பு மிரட்டல் விடுத்திருந்தது.
இதன் காரணமாக, திருவாட்டி முஃப்தி போன்ற தலைவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியா முழுவதும் காஷ்மீரிகளைக் குறிவைத்து இடம்பெறும் வெறுப்புச் செயல்கள் குறித்து மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோனும் கவலை தெரிவித்துள்ளார்.
“நாட்டின் பல பகுதிகளிலும் காஷ்மீரி மாணவர்கள் துன்புறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர்; அடித்து உதைக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் தங்கள் குடியிருப்புகளைக் காலிசெய்யுமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்,” என்று திரு சஜத் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து, காஷ்மீரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, காஷ்மீரிகள் துன்புறுத்தப்படுவதாக வெளியான தகவல்களை அடுத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளைத் தொடர்புகொண்டு, கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தமது எக்ஸ் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார்.