மும்பை: மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழலாம் என்று மத்திய புலனாய்வு அமைப்பு விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மும்பை மாநகர் முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக, வழிபாட்டுத்தலங்களில் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் உயர்மட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மும்பை மாநகர் காவல்துறை கூறியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மும்பையில் உள்ள அனைத்து கோயில்களிலும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தெரிந்தால் புகார் தெரிவிக்குமாறும் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“மக்கள் கூட்டம் மிகுந்த பகுதிகளிலும் வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த உத்தரவிட்டு உள்ளோம்.
“மும்பை மாநகரில் உள்ள எல்லா காவல்துறை துணை ஆணையர்களும் அவரவர் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்,” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறினார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை மும்பையின் கிராஃபோர்ட் சந்தையில் அளவுக்கு அதிகமான காவல்துறையினர் காணப்பட்டனர். அது ஓர் ஒத்திகை என்று கூறிய காவல்துறை, மேல் விவரம் அளிக்க மறுத்தது.
நவராத்திரி விழா, தீபாவளிப் பண்டிகை என மும்பையில் அடுத்தடுத்து விழாக்கள் நடைபெறவுள்ளன. மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இப்படிப்பட்ட சூழலில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த புலனாய்வுத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மும்பையில் பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது.