பயங்கரவாத தொடர்பு: கர்நாடகாவில் இளையர் தடுத்து வைப்பு

பயங்கரவாத தொடர்பு: கர்நாடகாவில் இளையர் தடுத்து வைப்பு

சித்திரிப்புப் படம்: ஐபிலீடர்ஸ்

19 Oct 2026 - 8:05 pm

1 mins read

பெங்களூர்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில், 19 வயது இளையர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் காவல்துறையினரும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மமதாஜுல் மாலிக் என அடையாளம் காணப்பட்ட அந்த இளையர், கலபுரகியில் உள்ள ஒரு நகைக்கடையில் தனது சகோதரருடன் பணிபுரிந்து வந்துள்ளார். இந்திய உளவுத்துறை அமைப்புகள் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பிராம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போது அவர் பிடிபட்டார்.

மாலிக், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர்களுடன் சமூக ஊடகங்கள் வாயிலாக முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அவரது கைப்பேசி, சமூக ஊடகக் கணக்குகளையும் தீவிரமாகப் பரிசோதித்து வருகின்றனர்.

இதுகுறித்து கலபுரகி நகரக் காவல் ஆணையர் எஸ்.டி. சரணப்பா கூறுகையில், சந்தேகத்தின் பேரில் 19 வயது இளையரிடம் விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்தார்.

முதற்கட்ட விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது. இதுவரை அவர் மீது அதிகாரபூர்வமாக எவ்வித வழக்கோ அல்லது முதல் தகவல் அறிக்கையோ பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

கர்நாடகாவில் அண்மைக்காலமாக பாகிஸ்தான் சார்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், டெலிகிராம் போன்ற செயலிகள் வழியாகத் தொடர்பில் உள்ள இளையர்கள் பிடிபடுவது அதிகரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்