புதுடெல்லி: இருநாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லவிருக்கும் நிலையில், அவரது விமானத்திற்குப் பயங்கரவாதத் தாக்குதல் மிரட்டல் வந்ததாக புதன்கிழமை (பிப்ரவரி 12) மும்பைக் காவல்துறை தெரிவித்தது.
ஆயினும், மிரட்டல் விடுத்தவர் கைதுசெய்யப்பட்டுவிட்டார் என்றும் அவர் மனநலம் குன்றியவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“அதிகாரத்துவப் பயணமாகப் பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போது அவரது விமானத்தைப் பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்று செவ்வாய்க்கிழமை மும்பைக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் தீவிரத்தன்மையைக் கருத்தில்கொண்டு, உடனடியாக அதுபற்றி மற்ற அமைப்புகளுக்குத் தகவல் தெரிவித்து, விசாரணையைத் தொடங்கினோம்,” என்று காவல்துறை விளக்கியது.
அதனைத் தொடர்ந்து, தொலைபேசிவழி மிரட்டல் விடுத்த ஆடவர் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டார். மும்பையின் செம்பூர் பகுதியைச் சேர்ந்த அவர் மனநிலை சரியில்லாதவர் எனச் சொல்லப்படுகிறது.
பிரான்சிற்கும் அமெரிக்காவிற்குமான தமது நான்கு நாள் பயணத்தைப் பிரதமர் மோடி திங்கட்கிழமையன்று தொடங்கினார். முதலில் பிரான்ஸ் சென்ற அவர், புதன்கிழமை அங்கிருந்து அமெரிக்காவிற்குப் புறப்படுவார்.
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது இது முதன்முறையன்று. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த இருவர் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் திரு மோடியைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த டிசம்பரில் போக்குவரத்துக் காவல்துறை அழைப்பு எண் வழியாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதன் தொடர்பில் மும்பையைச் சேர்ந்த ஷீத்தல் சவான், 34, என்ற ஆடவரைச் சந்தேகத்தின்பேரில் காவல்துறை கைதுசெய்தது.