பயங்கரவாதச் சதி: பெங்களூரில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க இளையர்

பயங்கரவாதச் சதி: பெங்களூரில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க இளையர்

2 mins read
74b1424f-3a18-45cb-94e5-9ce7b6de62f1
அசாஃபூல் மாலிக் (இடது), செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தன்னைப் போராளியாகச் சித்திரிக்கும் படத்தை உருவாக்கினார். - படங்கள்: என்டிடிவி
Google News Preferred Icon

பெங்களூரு: பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதும் இந்தியாவிலும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு, தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்புடன் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 25 வயது இளையரைப் பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆடவர் மேற்கு வங்கத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அசாஃபூல் மாலிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் பெங்களூரு நகரின் ஜிகனி பகுதியில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள டாடா அட்வான்ஸ்டு லிமிடெட் நிறுவனத்தில் பாதுகாப்பு ஊழியராக வேலை பார்த்து வந்தார். பொம்மசந்திரா தொழிற்பேட்டைப் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அவர் பிடிபட்டார்.

விசாரணையில், பாகிஸ்தான் ராணுவம் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பாகப் பள்ளிவாசல்கள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாகவும் அதனால் தான் ஆத்திரமடைந்ததாகவும் மாலிக் ஒப்புக்கொண்டார். மேலும் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.

முஸ்லிம்கள் இந்தியாவில் சிரமப்பட்டால் தான் அதற்குப் பழிவாங்கத் தூண்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஃபேஸ்புக் வாயிலாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இம்ரான் ஹைதர் என்பவருடன் மாலிக் தொடர்பில் இருந்ததாகக் காவல்துறை கூறியது. இம்ரான், டிடிபி அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் செல்ல விசாவிற்கு விண்ணப்பித்த மாலிக், நிதி நெருக்கடி காரணமாகத் தன் திட்டத்தைக் கைவிட்டதாகக் கூறினார். அவரது கைப்பேசியைக் கைப்பற்றிய காவல்துறையினர், அதில் உள்ள குரல் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாபாகிஸ்தான்ஆப்கானிஸ்தான்பயங்கரவாதம்சதித்திட்டம்ஆடவர்கைதுகாவல்துறைவிசாரணை

தொடர்புடைய செய்திகள்