மொராதாபாத்: ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சகாரன்பூர் பகுதிக்கான பயங்கரவாத எதிர்ப்புக் குழுவும் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் வட்டாரத்தின் கத்கர் பகுதி காவல்துறையினரும் இணைந்து நடத்திய முறியடிப்பு நடவடிக்கையில் உல்ஃபாத் ஹுசைன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள பயங்கரவாதி பிடிபட்டார் என்று அதிகாரிகள் கூறினர். அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர நால்வருடன் உல்ஃபாத் ஹுசைன், ஏற்கெனவே 2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்றும் அவர் 2008ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார் என்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ரன்விஜய் சிங் சொன்னார்.
“சகாரன்பூர் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவும் கத்கர் காவல்துறையும் இணைந்து நடத்திய முறியடிப்பு நடவடிக்கையில் ஹிஸ்புல் மஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த உல்ஃபாத் ஹுசைன் எனும் பயங்கரவாதி நேற்று (சனிக்கிழமை) பூஞ்ச் வட்டாரத்தில் கைதுசெய்யப்பட்டார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினோம். இதர நால்வருடன் அவர் 2002ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தார்; அப்போது அவரிடமிருந்து பெரிய அளவில் வெடிகுண்டுப் பொருள்கள், வெடிகுண்டு சாதனங்கள், கைத்துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன,” என்று திரு ரன்விஜய் சிங், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“அவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ 25,000 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு அவருக்கான நிரந்தரக் கைதாணையும் பிறப்பிக்கப்பட்டது. காவல்துறையும் பயங்கரவாதத் தடுப்பு அமைப்பும் அவரை அடையாளம் காண முயற்சிகளை எடுத்து வந்தன. கிடைத்த தகவல்களைக் கொண்டு அவரைக் கைதுசெய்தோம்,” என்றும் திரு ரன்விஜய் விளக்கினார்.
ஹுசைன், 2008ல் விசாரணைக் காவலில் விடுவிக்கப்பட்டார்; ஆனால், பிறகு அவர் பலமுறை கைதாணை, அழைப்பாணை விடுக்கப்பட்டபோதும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றும் திரு ரன்விஜய் கூறினார். இந்த விவகாரத்தின் தொடர்பில் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.