புதுடெல்லி: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரைக் கைது செய்த டெல்லி காவல்துறையினர், அவ்விருவரையும் திகார் சிறையில் அடைத்தனர்.
இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் ஐஎஸ் அமைப்பு நிகழ்த்த இருந்த மிகப் பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை டெல்லி காவல்துறையும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையின்போது ஏராளமானோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.
இந்தியாவில் மிகப்பெரிய நாச வேலைக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததன் பேரில், தேடுதல் வேட்டை தொடங்கியது.
இதில் நேப்பாளத்தைச் சேர்ந்த அன்சாருல் மியான் அன்சாரி என்பவர் முதலில் சிக்கினார். அவருடன் நடத்தப்பட்ட விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மேலும் ஒருவர் கைதானார்.
இவர்களிடம் இருந்து இந்திய ஆயுதப்படைகள் தொடர்பான பல்வேறு ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டதாகவும் ஐஎஸ் அமைப்பின் சதித்திட்டங்கள் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
புனே நகரில் கடந்த 2023ஆம் ஆண்டு இருவரும் தேடப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தனர்.
இதையடுத்து, எப்படியோ ஜகார்த்தாவுக்குத் தப்பிச் சென்ற இருவரும் இந்தியா திரும்பியபோது, மும்பை அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது திகார் சிறையில் உள்ள இருவரும் புனே நகரில் பதுங்கியிருந்த ஐஎஸ் அமைப்பின் இதர எட்டு பயங்கரவாதிகளுடன் இணைந்து, சில சதித்திட்டங்களை மேற்கொள்ள திட்டம் வகுத்ததாகத் தெரிகிறது. தற்போது தீவிரவாதிகளின் வலையமைப்பை முடக்கிவிட்டதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய புலனாய்வு அமைப்பு மும்பை விமான நிலையத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை சில நாள்களுக்கு முன்பு கைது செய்தது. அதன் பின்னர் இரண்டாவது நடவடிக்கையாக மேலும் இருவர் கைதாகி உள்ளனர்.
இந்திய ஆயுதப்படைகள் அண்மையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்தின. இதனையடுத்து ‘ஸ்லீப்பர் செல்’ உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.