இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டங்களைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி

2 mins read
ff9c3178-c0c8-4ce9-ac39-cfaee6d3e0dc
புதுடெல்லியில் கர்தவ்யா பாத் பகுதியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை. - படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 26) நடைபெறவுள்ள குடியரசு தினக் கொண்டாட்டங்களைச் சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய அரசின் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

‘26-26’ என்ற ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி இந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கக்கூடும் எனக் கருதப்படுவதால் அத்தகைய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பேருந்து, ரயில் நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்தியக் குடியரசு தின விழாவில் அதிபர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்.

இம்முறை ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஒர்ஸுலா வான்டேர்லேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், குடியரசு தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஐஎஸ்ஐ, லக்ஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அயோத்தி ராமர் கோவில், ஜம்மு காஷ்முரில் உள்ள ரகுநாத் கோவில், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் முக்கியமான பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரது புகைப்படங்களுடன் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் டெல்லி மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்த அல்கய்தா அமைப்பு திட்டமிட்டிருந்த நிலையில் அது முறியடிக்கப்பட்டது. அப்போது டெல்லியைச் சேர்ந்த பயங்கரவாதி முகமது ரெஹான் தப்பியோடிவிட்டார்.

இந்நிலையில், டெல்லியில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் இவரது படமும் இடம்பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்