புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலை நடத்திய மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் செவ்வாழ்க்கிழமை (ஜூலை 29) நடந்த சிறப்பு விவாதத்தின்போது எதிர்த்தரப்பினர் முன்வைத்த கேள்விக்கணைகளுக்கு அவர் பதிலளித்தார்.
காஷ்மீரில் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்பரேஷன் மகாதேவ்‘ அதிரடி நடவடிக்கையின்போது மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகத் திரு ஷா தெரிவித்தார்.
ஃபைசல் என்று அழைக்கப்படும் சுலைமான், ஆப்கான், ஜிப்ரான் ஆகியோரே கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். இந்தியப் படையினரிடம் அதற்கான சான்றுகள் இருப்பதாகவும் திரு ஷா குறிப்பிட்டார்.
பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தனர், எங்குச் சென்றனர், தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்ற கேள்விகளை எதிர்த்தரப்பினர் முன்வைத்ததை அவர் சுட்டினார்.
முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் அந்தக் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
“அரசாங்கத்தில் இருப்பதால் நாங்களே பொறுப்பு. முன்னாள் அமைச்சர் சிதம்பரம் பயங்கரவாதிகளின் அடையாளம் குறித்துக் கேள்விகள் கேட்டது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு எங்களிடம் சான்றுகள் உள்ளன. துப்பாக்கிகளும் இருந்தன. அவர்களிடம் இருந்த சாக்லெட்டுகளும் பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டவையே,” என்று விளக்கமளித்தார் அமைச்சர் ஷா.