புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களும் அந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களோடு அவர் வானொலியில் பேசுகையில், “காஷ்மீரில் வளர்ச்சி அதிகரித்து, அமைதி திரும்பியது. ஆனால், அதை எதிரிகள் விரும்பவில்லை.
“பஹல்காமில் நடந்த இந்தத் தாக்குதல், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களின் விரக்தியைக் காட்டுகிறது. அவர்களின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது.
“பயங்கரவாதிகளும் பயங்கரவாதத்தின் மூளையாக இருப்பவர்களும் காஷ்மீர் மீண்டும் அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் இவ்வளவு பெரிய சதித்திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள்.
“உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, முழு நாடும் ஒரே குரலில் பேசுகிறது.
“உலகத் தலைவர்கள் பலர் என்னிடம் தொலைபேசி மூலமாகவும் கடிதம் மூலமாகவும் தொடர்புகொண்டனர். இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அனைவரும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் 1.4 பில்லியன் இந்தியர்களுடன் முழு உலகமும் நிற்கிறது.
“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன். இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்,” என்று அவர் பேசினார்.