புதுடெல்லி: மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதல் உலகுக்குச் சோதனையான காலகட்டம் என இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாகத்தான் ஹோர்முஸ் நீரிணை வழியே கச்சா எண்ணெய்க் கப்பல்களை இந்தியாவுக்குக் கொண்டுவர முடிந்தது என்றார்.
மத்திய கிழக்குப் போர் குறித்துப் பல்வேறு தரப்பினருடன் இந்தியா தொடர்ந்து பேசிவருகிறது என்றும் இதன்மூலம் நாட்டின் எரிசக்தி தேவையைப் பூர்த்திசெய்ய முடியும் என்றும் திரு ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய கிழக்கில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இத்தகைய பேச்சுவார்த்தைகள் அவசியம் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் நலனைக் காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் அதற்கான அரசதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
மத்திய கிழக்குப் போர் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகுக்கும் சோதனைக்காலமாக மாறிவிட்டதாகத் தெரிவித்த திரு ஜெய்ஸ்வால், எரிசக்தி உட்பட பொது உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
இக்கருத்தை இந்தியா ஏற்கெனவே வலியுறுத்தி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கெனவே உலக அளவில் எரிசக்திச் சூழல் நிலையற்றதாக உள்ளது என்றும் அச்சூழலை தற்போதைய மோதல் போக்கு மேலும் சீர்குலைத்துவிடும் என்பதே இந்தியாவின் கவலை என்றும் திரு ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.
“எனவே, இத்தகைய தாக்குதல்கள் ஏற்புடையவை அல்ல. அவை நிறுத்தப்பட வேண்டும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, வியாழக்கிழமை (மார்ச் 19) மாலை இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடான் சாரை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது, மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல், அதன் பல்வேறு தாக்கங்கள் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான இணை அமைச்சர் ரீம் அல் ஹாஷிமியுடனும் திரு ஜெய்சங்கர் பேசினார். மத்திய கிழக்கு நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்ததாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

