புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘உக்கிரம்’ துப்பாக்கி வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்த துப்பாக்கியைத் தெலுங்கானாவைச் சேர்ந்த ‘த்விப்பா’ பொதுத் துறை நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்திய ராணுவத்திற்கும் காவல்துறைக்கும் துப்பாக்கிகளைத் தயாரிக்க கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது, இதுவரை 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிக்கான பாகங்களை உருவாக்கியுள்ளது.
தற்போது ‘த்விப்பா’ நிறுவனமும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து ‘உக்கிரம்’ 7.62 x 51 ‘எம்எம்’ வகை துப்பாக்கியைத் தயாரித்துள்ளன.
ராணுவம், உள்துறை அமைச்சின் அனைத்துத் தரப்பரிசோதனைகளையும் நிறைவு செய்துவிட்ட நிலையில், இந்திய ஆயுதப் படைகளின் பயன்பாட்டிற்காக ‘உக்கிரம்’ துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக ‘த்விப்பா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிபி ஜோசப் தெரிவித்துள்ளார்.
மேலும், மிகக் குறைந்த எடையில் (4 கிலோ) வடிவமைக்கப்பட்டுள்ள ‘உக்கிரன்’ துப்பாக்கி மூலம் 500 மீட்டர் தூரமுள்ள இலக்குகளை எளிதில் குறிவைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

