தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

20 ஆண்டுகள் கழித்து இணையும் தாக்கரே சகோதரர்கள்

2 mins read
8db4e818-3382-4ab2-bb86-6e7b2ab24fb7
உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே. - படம்: ஊடகம்

மும்பை: இந்தித் திணிப்பை எதிர்த்து மகாராஷ்டிராவில் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என தாக்கரே சகோதரர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தி எதிர்ப்புக்காக ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்னர் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் கைகோத்துள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கையின்படி, மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு, முதலாம் வகுப்பில் இருந்து, பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியுள்ளது.

இதற்கு உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இரு கட்சிகளும் இணைந்து நடத்த உள்ள இந்தி எதிர்ப்புப் பேரணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜூலை 5ஆம் தேதி இந்தப் பேரணி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரே. மகாராஷ்டிராவில் செல்வாக்குமிக்க அரசியல் கட்சியாக சிவசேனா திகழ்ந்தது.

பால் தாக்கரே காலம்தொட்டு, சிவசேனாவும் பாஜகவும் நட்பு பாராட்டி வந்தன.

இந்நிலையில், பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே, கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியைத் தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் உத்தவ், ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் மாநில, கட்சி நலம் கருதி தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு கைகோக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அண்மையில் இருவரும் சூசகமாக தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜூலை 5ஆம் தேதி நடைபெற உள்ள பேரணியில், இருவரும் பங்கேற்க உள்ளனர் என்றும் இதன் மூலம் இரு கட்சிகளும் நெருங்கி வரும் என்றும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் நகராட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தாக்கரே சகோதரர்களின் இந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு கட்சிகளுக்கும் மும்பை, தானே, கொங்கன், நாசிக் ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது. இதனால் ஆளும் பாஜக தரப்பு கவலையடைந்துள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்