இந்திய நாட்டுப் பெண்களிடம் ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய 24,000 டன் தங்கம் உள்ளது. இது உலக ஆபரணத் தங்கத்தில் 11 விழுக்காடு என்று உலக தங்க மன்றம் (World Gold Council ) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
அதிக தங்க சேமிப்பைக் கொண்டிருக்கும் உலகின் முதல் ஐந்து நாடுகளின் ஒட்டுமொத்த தங்க சேமிப்பைவிட, இந்திய நாட்டுப் பெண்களிடம் உள்ள தங்கத்தின் அளவு அதிகம்.
அமெரிக்கா 8,000 டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்ஸ் 2,400 டன், ரஷ்யா 1,900 டன் தங்கத்தை வைத்திருக்கிறது. இவற்றின் ஒட்டுமொத்த இருப்பைக் கருத்தில் கொண்டாலும், இந்திய நாட்டுப் பெண்களுக்கு சொந்தமான தங்கத்தின் அளவைவிடக் குறைவாகவே இருக்கும். ஆக்ஸ்போர்டு தங்கக் குழுமத்தின் (Oxford Gold Group) கணிப்பின்படி, இந்திய நாட்டுக் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக உலக தங்கத்தில் 11 விழுக்காட்டை வைத்திருக்கின்றன. இது அமெரிக்கா, அனைத்துலகப் பண நிதியம், சுவிட்சர்லாந்து,ஜெர்மனி ஆகிய நாடுகளின் இருப்பைவிட அதிகமாக உள்ளது.
தங்க நகைகளைச் சேர்ப்பதில் தென்னிந்தியப் பெண்கள் அதிக ஆர்வம் உள்ளவர்கள். இந்தியாவின் மொத்த தங்கத்தில் தென்னிந்தியா 40 விழுக்காட்டை வைத்திருக்கிறது.
தமிழகம் மட்டும் 28 விழுக்காட்டை கொண்டிருக்கிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான உலக தங்க மன்றத்தின் ஓர் ஆய்வில், இந்திய குடும்பங்கள் 21,000 டன் முதல் 23,000 டன் வரை தங்கத்தை வைத்திருந்தன. இது 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 24,000 முதல் 25,000 டன் வரை அதிகரித்தது. இது 25 மில்லியன் கிலோகிராமுக்கும் அதிகம்.
இந்தக் கணிசமான தங்க இருப்பு இந்தியப் பொருளியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% வரை கொண்டிருக்கிறது.
இந்திய வர்த்தக அமைச்சின் தகவலின்படி, இந்தியாவின் தங்க இறக்குமதி 2024 நவம்பரில் 14.86 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இது 2023 நவம்பர் இறக்குமதியான 3.44 பில்லியன் டாலரைவிட நான்கு மடங்கு அதிகம்.
ஒட்டுமொத்தமாக, இந்த நிதியாண்டில் ஏப்ரல்-நவம்பர் மாதங்களில் இறக்குமதி 49% அதிகரித்து 49 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 32.93 பில்லியன் டாலராக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
பன்னெடுங்காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கத்தை விரும்பி, முக்கியத்துவம் தந்துவருகின்றனர். கலாசார ரீதியாகவும் அவர்களது வாழ்வில் தங்கத்திற்கு முக்கியமான இடம் உண்டு.
இந்தியத் திருமணங்களில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தாலியிலிருந்து வேலைப்பாடுகள் நிறைந்த மணப்பெண் நகைகள் முதல் தங்கக் கட்டிகள் வரை, தங்கத்தைப் பரிசளிப்பது பல தலைமுறைகளாகத் தொடரும் இந்தியப் பாரம்பரியம். இது இந்தியப் பெண்களிடையே கணிசமான தங்கச் சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது. இதனால் வீட்டுத் தங்க உடைமையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்திய வருமான வரிச் சட்டங்களின்படி, திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்க அனுமதி உண்டு. திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். ஆண்கள் அதிகபட்சமாக 100 கிராம் வரை மட்டுமே வைத்திருக்கலாம்.