சென்னை: கடந்த சில நாள்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 22) வரலாற்றிலேயே முதல்முறையாகச் சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்துள்ளது.
சென்னையில், 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்து, ரூ.75 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அடுத்தடுத்த வாரங்களில் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் எனப் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் நிற்காத பட்சத்தில், தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அதாவது, விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் பொருளியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
உலக நாடுகளிடையே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சூழல் காரணமாகவும் அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாகவும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பொருளியல் நிபுணரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சீனிவாசன், ‘இடிவி பாரத்’ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘அமெரிக்கா-சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போரால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். வரும் காலத்தில் கிராம் ரூ10,000 தாண்டும்,” எனக் கூறினார்.