தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வயநாடு மக்களுக்கு நன்றிகூறிய பிரியங்கா பாஜகவை கடுமையாக விமர்சித்தார்

2 mins read
1e5c3b73-e47e-4c62-bf2c-a4b87e0c15b5
கோழிக்கோடு விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்ற பிரியங்கா காந்தி, எம்பி. - படம்: இந்திய ஊடகம்

வயநாடு: மக்களவை இடைத்தேர்தலில் தம்மை வெற்றியடையச் செய்த கேரளாவின் வயநாடு வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல நேரடியாக வந்த பிரியங்கா காந்தி, பாஜகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றதும் வயநாடு தொகுதிக்கு சனிக்கிழமை தமது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியுடன் பிரியங்கா சென்றார்.

டெல்லியிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில் கோழிக்கோடு வந்தடைந்த அவருக்கு காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றுதிரண்டு வரவேற்றனர்.

வயநாட்டில் உள்ள கருளை, வண்டூர் மற்றும் எடவண்ணா ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கோழிக்கோடு மாவட்டம் திருவம்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரியங்கா காந்தி பேசினார்.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றாத கட்சி என்று அப்போது அவர் சாடினார்.

மேலும் அவர் பேசுகையில், “அந்தக் கட்சியில் விதிமுறைகள் இல்லை, வெளிப்படையான விளக்கங்கள் இல்லை. ஜனநாயக விதிமுறைகள் அந்தக் கட்சியிடம் இல்லை என்பதை அதன் செயல்பாடுகள் காட்டுகின்றன.

“நாம் அனைவரும் இன்று ஒரு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நமது ஜனநாயகத்தை வேரறுக்கத் துடிக்கும் ஒரு சக்திக்கு எதிராக நாம் போராடி வருகிறோம்,” என்றார் பிரியங்கா.

வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு, 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், இடதுசாரிக் கூட்டணி வேட்பாளர் சத்யன் மொகேரியைத் தோற்கடித்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் எம்பியாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது கேரளாவின் பாரம்பரிய கசவுப் பட்டுச் சேலையை அவர் அணிந்திருந்தார்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவுகளில் 300க்கும் மேற்பட்டோர் மாண்டனர். அங்கு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் காட்டுவதாக ராகுல் காந்தி பேசும்போது குறிப்பிட்டார்.

நாட்டின் எல்லாப் பகுதிகளும் எல்லா மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பு வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்