பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கோலாகலமாக நடந்த சிவராத்திரியில் கலந்துகொண்டது பற்றி விமர்சனம் எழுந்துள்ளது
இந்நிலையில், தம் தனிப்பட்ட நம்பிக்கையுடன் அரசியலைக் கலக்கக்கூடாது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
“கோவை ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதை வைத்துப் பலரும் தங்களின் கருத்துகளைக் கூறி வருகின்றனர். எனக்கு நம்பிக்கையுள்ள இடத்திற்கு நான் செல்கிறேன். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியே காங்கிரஸ். நான் அங்குச் சென்றதில் அரசியல் இல்லை. வழிபாட்டில் அரசியலைக் கலக்கக்கூடாது,” என்று திரு சிவக்குமார் கூறினார்.
“நான் எனது தனிப்பட்ட நம்பிக்கை காரணமாக ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதுகுறித்து விமர்சிப்பவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. நான் அனைத்து சமயங்களையும் மதிக்கிறேன். எனது சமயத்தை நேசிக்கிறேன்,” என்றார் அவர்
மத்திய அரசு தேர்தல் தொகுதி மறுவரையறை செய்யவிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால்தான் தொகுதி மறுவரையறை செய்ய முடியும். ஆனால், மத்தியில் தற்போது உள்ள அரசுக்கு அத்தகைய பெரும்பான்மை இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.