நியூயார்க்: பாகிஸ்தானின் பயங்கரவாதிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உலக நாடுகளுக்கு விளக்குவதற்காக இந்தியா, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கிறது.
இதன்படி, அனைத்துக் கட்சிப் பேராளர்கள் அடங்கிய பல்வேறு குழுக்கள் உலக நாடுகளுக்குப் பயணம் செய்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிப் பேராளர்கள் குழு ஒன்று, கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டது.
சசி தரூர் தலைமையிலான அக்குழுவில் சாம்பவி (லோக் ஜனசக்தி - ராம்விலாஸ்), சர்ஃபராஸ் அகமது (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), ஹரிஷ் பாலயோகி (தெலுங்கு தேசம்), ஷஷாங்க் மணி திரிபாதி (பாஜக), புவனேஸ்வர் காலிதா (பாஜக), மிலிந்த் தியோரா (சிவசேனா), தேஜஸ்வி சூர்யா (பாஜக), முன்னாள் இந்தியத் தூதர் தரண்ஜித் சந்து ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சசி தரூர் எம்.பி. பேட்டியளித்தார்.
“சிலர் காஷ்மீரில் காணப்படும் இயல்புநிலையையும் காஷ்மீர் மக்களின் வளங்களையும் சேதப்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்த விரும்பியுள்ளனர். தவிர, அராஜகத்துடன் அவர்கள் செயல்பட்டு உள்ளனர். அதுவும் மக்களின் மதம் என்னவென விசாரித்து, அடையாளம் கண்டு அதன் அடிப்படையில் அவர்களை கொலை செய்து உள்ளனர்.
“இந்தத் தாக்குதல் நடந்து ஒரு மணிநேரத்தில் ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற அமைப்பு இதற்கு பொறுப்பேற்று உள்ளது. அது தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் இணைந்த முன்னணி அமைப்பு என்பது சில ஆண்டுகளாகவே தெரிந்த விஷயம்.
“அது அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் உள்ளது. ஐநா குழுவால் தடை செய்யப்பட்ட குழுக்களின் பட்டியலிலும் அது உள்ளது. 2023, 2024 ஆண்டுகளில் ஐநா குழுவிடம் சென்று இந்தியா தகவல்களை அளித்தது. 2025ஆம் ஆண்டில் அது தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் வழக்கம்போல் அதனை மறுத்து வருகிறது,” எனக் கூறியுள்ளார்.
“பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக எந்தவித குற்ற விசாரணையோ, தீர்ப்போ இல்லை. பாகிஸ்தானில் பயங்கரவாத உட்கட்டமைப்புகளை அழிக்கும் எந்த முயற்சியும் இல்லை. பதிலாக, அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை செய்ததற்காக, பாகிஸ்தான் எதிர்விளைவை பெறப்போகிறது. நாங்கள் அதற்காக ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு, பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு, துல்லியத்துடன் பதில் தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம்,” என்றும் சசி தரூர் தெரிவித்தார்.