கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் முடிவுகளைத் திருடிவிட்டதாகத் தேர்தல் ஆணையத்தின்மீதும் பாரதிய ஜனதா கட்சியின்மீதும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி ‘அறத்திற்கு எதிரானது’ எனக் குறிப்பிட்ட அவர், “தேர்தல் ஆணையம் பாஜகவின் ஆணையம்,” என்றும் சாடினார்.
பவானிபூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சுவேந்து அதிகாரி 15,105 வாக்கு வித்தியாசத்தில் மம்தா தோற்றுப்போனார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் திங்கட்கிழமை (மே 4) இரு வேட்பாளர்களும் நடைமுறைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்த நிலையில், அங்கு சூழல் மிகவும் இறுக்கமானது. மாலை நேரத்தில் இரு தரப்பினரும் மாறி மாறிப் புகார்களைக் கூறியதால் நிலைமை மோசமானது.
இரவு 8 மணியளவில் மம்தா பானர்ஜி வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியே வந்தபோது, நாடகம் அதன் உச்சகட்டத்தை எட்டியது.
பாஜக மற்றும் மத்தியப் படைகள்மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், தம்முடைய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் முகவர் மையத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அந்தச் சமயத்தில், 16 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர் 538 வாக்குகள் பின்னடைவில் இருந்தார்.
“அவர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினர். என்னை மையத்திற்குள் நுழைய விடவில்லை. பாஜகவின் தூண்டுதலின் பேரில், நாங்கள் முன்னிலையில் இருந்த கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியது. பாஜக ஓர் அரக்கத்தனமான கட்சி,” என்று அவர் சாடினார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்தாலும் நாங்கள் மீண்டும் எழுச்சி பெற்று போராடுவோம்,” என்று கூறிவிட்டு அவர் இல்லத்திற்குப் புறப்பட்டார்.
பாஜகவையும் இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் கடுமையாகச் சாடிய மம்தா, இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதிகாரபூர்வமாகப் புகார் அளிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது மாலை 5:30 மணியிலிருந்து கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாகத் தடைபட்டது.
வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் அதிரடி மாற்றங்களைக் கண்டன. 15வது சுற்றின் முடிவில் மம்தா 2,929 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். ஆனால், 16வது சுற்றில் சுவேந்து அதிகாரி அந்த நிலையைத் தலைகீழாக மாற்றி, 500க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இறுதியில் மம்தா தோல்வியைத் தழுவினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 206 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 81 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி ஆகியுள்ளது.

