என்னை ஊழல்வாதியாக நிரூபிக்க சதி செய்தனர்: கெஜ்ரிவால்

2 mins read
efa1315f-4753-445c-84ef-a22a69e1dae9
டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், ஊழல் செய்தேன் என்று நினைத்தால் மக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி:  தன்னை ஊழல்வாதியாக நிரூபிக்க சதி நடந்ததாக டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மாநாட்டில் அவர் பேசினார்.

“என்னையும், ஆம்ஆத்மி கட்சி தலைவர் சிசோடியாவையும் ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்தார். அவர் எங்களது மதிப்பை கெடுக்க முயன்றார்,” என்று கெஜ்ரிவால் கூறினார்.

“நவராத்திரி விழா துவங்கும் போது, முதல்வர் வீட்டை காலி செய்து விடுவேன். அரசு வசதிகள் எல்லாம் நிராகரித்துவிடுவேன். எதிர்க்கட்சிகள் மற்றும் அரசை உடைக்க அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை பிரதமர் மோடி பயன்படுத்தும் விதம்? இது சரியா? இதுதான் தேச பக்தியா?

“ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்களை பா.ஜ.,வில் சேர்ப்பது நியாயமானதா? நான் திருடன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்னை சிறைக்கு அனுப்பியவர்கள் திருடன் என்று நினைக்கிறீர்களா? கடந்த 10 ஆண்டுகளில் நான் அன்பை மட்டுமே சம்பாதித்தேன். அதனால் தான் மக்கள் என் மீது அன்பு செலுத்துகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகளால் மனதளவில் காயம் அடைந்துள்ளேன். ஊழலில் ஈடுபடவோ, முதல்வர் நாற்காலியில் அமரவோ அரசியலில் சேரவில்லை. நான் ஊழல் செய்தேன் என்று நினைத்தால் மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம்.

“மரியாதையை மட்டுமே சம்பாதித்துள்ளோம், பணத்தை அல்ல. நேர்மையாக தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். லோக்சபா தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ்., தேவையில்லை என பாரதிய ஜனதா தேசிய தலைவர் நட்டா கூறினார். நான் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திடம் கேட்க விரும்புகிறேன். நட்டா இப்படி சொல்லும் போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்,” என்று கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்