மணிக்கணக்கில் குளத்தில் பதுங்கியிருந்த திருடன் கைது

மணிக்கணக்கில் குளத்தில் பதுங்கியிருந்த திருடன் கைது

2 mins read
eb3985d4-4f8d-4431-8418-ce8c647a896f
நீருக்கடியில் நீண்ட நேரம் பதுங்கியிருந்த திருடனைக் காவல்துறையினர் கைது செய்தனர். - படங்கள்: என்டிடிவி

சிஹோரா: திரைப்படக் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில், காவல்துறையிடமிருந்து தப்பிக்க முயன்ற திருடனை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

அந்தத் திருடன் தப்பிக்கும் நோக்கில் தாமரைத் தண்டு மூலம் சுவாசித்தபடி 5 மணி நேரமாக குளத்திற்குள் பதுங்கியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ரயிலில் கைவரிசை

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தின் சிஹோரா நகரில் கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 6) இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ஹர்விந்தர் சிங் என்ற ஆடவர், ரயில்களில் குளிரூட்டி வசதியுள்ள பெட்டிகளில் பயணம் செய்யும் பெண்களைக் குறிவைத்து நகை, பணப்பைகளைத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று அதிகாலை, ரேவா-இட்வாரி விரைவு ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் கைவரிசை காட்டிவிட்டுத் தப்ப முயன்றபோது பாதுகாப்புப் படையினர் அவரைத் துரத்தினர்.

தாமரைத் தண்டு ‘தந்திரம்’

காவல்துறையினர் தன்னைச் சூழ்ந்துகொண்டதை அறிந்த ஹர்விந்தர், அருகில் இருந்த பாசி படர்ந்த ஒரு குளத்தில் குதித்தார்.

குளத்தின் மேற்பரப்பில் தாமரை இலைகள் அடர்த்தியாக இருந்ததால், உள்ளே இருப்பவரை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. ஏறத்தாழ 5 மணி நேரமாக நீருக்கடியில் அவர் பதுங்கியிருந்தார். பின்னர் முக்குளிப்பாளர்கள் தேடல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போதுதான், ஒரு சிறிய தாமரைத் தண்டைக் குழாய்போலப் பயன்படுத்தி, அதன் மூலம் நீருக்கு அடியில் இருந்தபடி அவர் சுவாசித்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருடனின் புத்திசாலித்தனத்தைக் கண்டு அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.

பல மாநிலங்களில் தேடப்பட்டவர்

பிடிபட்ட ஹர்விந்தர் சிங்மீது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஹர்விந்தர் சிங்கின் சினிமா பாணி முயற்சி பலிக்கவில்லை. விடாமுயற்சியுடன் தேடிப் பிடித்தோம் என்று ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் விசாரணை தொடர்வதாகவும் காவலதுறை கூறியது.

குறிப்புச் சொற்கள்