உண்டியலுக்குள் கை சிக்கியதால் இரவு முழுவதும் கண்ணீர் வடித்த திருடன்

உண்டியலுக்குள் கை சிக்கியதால் இரவு முழுவதும் கண்ணீர் வடித்த திருடன்

1 mins read
48d72143-e577-4008-832e-23893a4e1612
கருவறைக்குமுன் இருந்த உண்டியலில் திருடனின் கை மாட்டிக்கொண்டது. - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: கோவிலில் திருடச் சென்ற இடத்தில் உண்டியலுக்குள் கை சிக்கிக்கொண்டதால் இரவு முழுவதும் திருடன் கண்ணீர் சிந்திய சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

காமரெட்டி மாவட்டம், பிக்னூர் அருகே ராமேசுவரப்பள்ளி எனும் சிற்றூரில் மசுபல்லே போசம்மா எனும் கோவில் இருக்கிறது.

அக்கோவிலில் பணிபுரிந்து வந்த சுரேஷ் என்ற ஆடவர், உண்டியல் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்.

அதன்படி கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 1) இரவு 10 மணியளவில் யாருக்கும் தெரியாமல் சுரேஷ் கோவிலுக்குள் நுழைந்தார்.

கோவில் கருவறைக்குமுன் இருந்த உண்டியலில் பணம் போடும் பகுதியை அவர் லேசாக உடைத்தார். தன் இடக்கையை உள்ளேவிட்ட அவர், கை நிறையப் பணத்தை அள்ளினார்.

ஆனால், எளிதாக உண்டியலுக்குள் நுழைந்த கையை வெளியே எடுக்க முடியாமல் அவர் திணறினார். கை வசமாக சிக்கிக்கொண்டதால் அவரால் அதனை விடுவிக்க முடியவில்லை.

இதனால், மறுநாள் காலை 10 மணிவரைக்கும் அவர் உண்டியலுக்குள் கையைவிட்டபடியே இருக்க நேர்ந்தது.

காலையில் கோவிலுக்கு வந்த பூசாரியும் மற்ற ஊழியர்களும் சுரேஷ் உண்டியலுக்கு அருகே நின்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு, அவரது கை உண்டியலுக்குள் மாட்டிக்கொண்டதைக் கண்ட பின்னர்தான் உண்மை அவர்களுக்குத் தெரிந்தது.

தகவலறிந்து கோவிலுக்கு விரைந்துவந்த காவல்துறையினர் கருவியின் துணையுடன் உண்டியலை உடைத்து, சுரே‌ஷின் கையை விடுவித்தனர்.

பின்னர் அவரைக் கைதுசெய்த காவல்துறை, அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்