தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியில் தமிழக எம்.பி.யிடம் நகை பறித்த திருடன் கைது

1 mins read
de9598ab-3ff1-4c45-97cc-9b7ae30fb957
தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவத்தால் தாம் மிகுந்த மன அதிர்ச்சிக்கு ஆளானதாகக் கூறினார் மயிலாடுதுறை எம்.பி. சுதா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடனைக் கைதுசெய்துவிட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள சுதா, அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) அதிகாலையில் அவர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த திருடன், சுதா கழுத்தில் அணிந்திருந்த 4.5 சவரன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றான்.

அப்போது, தான் காயமுற்றதாகவும் தனது ஆடைகள் கிழிந்ததாகவும் கூறிய சுதா, அதுபற்றி டெல்லி சாணக்கியபுரி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

டெல்லியின் பாதுகாப்புமிக்க பகுதியாகக் கருதப்படும் சாணக்கியபுரியிலேயே சங்கிலிப் பறிப்பு நிகழ்ந்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பல்வேறு குழுக்களை அமைத்து திருடனைப் பிடிக்கும் முயற்சியில் டெல்லி காவல்துறை இறங்கியது. 1,500க்கும் மேற்பட்ட கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளும் ஆராயப்பட்டன.

இந்நிலையில், சுதாவின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடனைப் பிடித்துவிட்டதாகவும் அவனிடமிருந்து சங்கிலி மீட்கப்பட்டுவிட்டதாகவும் புதன்கிழமை தனது எக்ஸ் பக்கம் வழியாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதான அந்த ஆடவர் சோனு என்ற சோகன் ராவத் என்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அவன்மீது பல வழக்குகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கடந்த ஜூலை 26ஆம் தேதியே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் குற்றமிழைத்து அவன் பிடிபட்டுள்ளான்.

குறிப்புச் சொற்கள்