தாய்மொழியில் சிந்தித்தலே சிறந்த படைப்பாற்றல்: வெ.இறையன்பு

தாய்மொழியில் சிந்தித்தலே சிறந்த படைப்பாற்றல்: வெ.இறையன்பு

1 mins read
712340ba-31dc-40c1-90d8-1d6983a714f3
பள்ளி மாணவர்கள் எழுதிய 108 நூல்களை வெளியிட்டார் வெ.இறையன்பு. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தாய்மொழியில் சிந்தித்து எழுதும்போதுதான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும் என்று முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

‘எழுதுக’ இயக்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்கள் எழுதிய 108 நூல்கள் வெளியிடும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நூல்களை வெளியிட்டு பேசியபோது, “பேனாவைக் கையில் எடுத்து எழுதத் தொடங்கினாலே அலைபேசியைப் பயன்படுத்த நேரம் இருக்காது. அத்துடன், எழுத்து வாசிப்பைத் தூண்டும். வாசிப்பு மொழித்திறனையும் கற்பனை வளத்தையும் பெருக்கும். எழுதுவதன் மூலம் உற்றுநோக்கும் திறனும், மனிதர்களை வாசிக்கும் திறனும் மேம்படும்.

“இதனால் உங்கள் கவனச்சிதறல் முழுவதுமாக அகன்றுவிடும்; சமூக அக்கறை கொண்ட சான்றோர்கள் உருவாகுவார்கள். ஆங்கிலம் மட்டுமே அறிவல்ல. தாய்மொழியில் சிந்தித்து எழுதும்போதுதான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும். அறிவியல், கணிதம் எனப் பல்வேறு துறைகளிலும் சாதிக்க முடியும்.

“படைப்பாற்றலைத் தூண்டிவிடும்போது உங்களுக்குத் தன்னம்பிக்கை வரும். அது உங்களை அடுத்த கட்டத்திற்கு முன்நகர்த்திச் செல்லும். இந்த ‘எழுதுக’ இயக்கம் அரசுப் பள்ளிகளுடன் நின்றுவிடாமல் கண்ணகி நகர் போன்ற இதர பகுதிகளுக்கும் சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

“இதன் தொடர்ச்சியாகத் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இவ்வியக்கம் மாணவர்களிடம் சமூக அக்கறை, நேர்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்க்கும். இவற்றைக் கடந்து சாதி, மதப் பாகுபாடு இல்லாத சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும். அதற்கு இந்த எழுத்து உதவும்,” என்று அவர் பேசினார்.

குறிப்புச் சொற்கள்